''மனம்பேரியை எனக்கு தெரியாது... அவர் என்னுடைய செயலாளரும் இல்லை..." தடுமாற்றத்துடன் பதிலளிக்கும் ஜோன்ஸ்டன்


 
சம்பத் மனம்பேரி என்பவர் தனது ஒருங்கிணைப்புச் செயலாளர்களில் ஒருவராகப் பணியாற்றவில்லை என்று முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மறுத்துள்ளார். இதுகுறித்து தவறான தகவல்களைப் பரப்புபவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

குருநாகலில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது இதனைத் தெரிவித்த அவர்,

தற்போது மனம்பேரி என்ற ஒருவர் எனது ஒருங்கிணைப்புச் செயலாளர்களில் ஒருவர் என்று கூறுகிறார்கள்.
நான் இந்த மாவட்டத்திலிருந்து மட்டுமே ஒருங்கிணைப்புச் செயலாளர்களை நியமித்தேன் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இந்தக் கூற்று என்னுடைய பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் முயற்சி என்றார்.


இதேநேரம் ஒழுங்கமைக்கப்பட்ட பாதாள உலகக் குழுக்களில் சேர்ந்து ஐஸ் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் சிறிலங்கா பொதுஜன பெரமுன பிரதேச சபை உறுப்பினர் சம்பத் மனம்பேரி, முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுடன்  இணைந்து செயல்பட்டு வருவதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால பாராளுமன்றில் அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதேபோன்று கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டமை தொடர்பில் வரும் முறைப்பாடுகள் தொடர்பில்  குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.போதைப்பொருளுடன் எமது அரசாங்கத்தை தொடர்புபடுத்த  நாமல் எம்.பி முயற்சித்தார். 

ஆனால் பொதைப்பொருளுடன் பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினர் மனம்பேரி தொடர்புபட்டவர் என யாரும் அறிந்த விடயம். அவர் தற்போது கைது செய்யப்பட்டிருக்கிறார்.அவர் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவின் இணைப்புச் செயலாளர். அதனால் பொதைப்பொருளுடன் தொடர்புபட்ட பலர் மொட்டு கட்சியில் இருக்கின்றனர்.

நாட்டுக்குள் பொதைப்பொருள் யார் கொண்டுவருகிறார்கள் என்பதை மக்களுக்கு தெரியும்.  அதனால் இவர்கள் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டை மற்றவர்களின் மீது சுமத்தவே தற்போது இவர்கள் முயற்சிக்கின்றனர். இவர்களின்  இந்த குற்றச்சாட்டுக்களுக்கு நாட்டு மக்கள்  ஏமாறப்போவதில்லை.  இந்த  நாட்டில் பாதாள குழுக்களை போஷித்து, அதன் மூலம் பொதைப்பொருளை நாட்டுக்கு கொண்டுவந்து, விநியோகித்து  வந்தவர்களை மக்கள் துரத்தியடித்த பின்னர், தற்போது எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு, எம்மை விமர்சித்து  வருகின்றனர் என்றார்